Monday, June 29, 2015

மதுரை பர்மா இடியாப்பம் கடை , கீழ வெளி வீதி | மணக்கும் மதுரை



சாப்பாடு என்கிற விஷயம் எல்லாருக்கும் குறைச்சபட்சம் ஆவது பிடிச்சதா தான் இருக்கணும். எதாவது ஊருக்கு நம்ம புதுசா போன இங்க சாப்பிட நல்ல கடை எங்க இருக்குன்னு கேப்போம். இந்த ஒரு வார்த்தைய வச்சுகிட்டு எந்த கடைலப்பா ருசியான உணவு கிடைக்கும்ன்னு தேடுறது நம்மிள்ள பலருக்கு வாடிக்கையானது தான். ஆமா சரி சாப்பாட்டுல ருசின்னு சொல்றங்களே அப்படின்னா என்னன்னு சிலபேர் சிலசமயங்களில் என்கிட்ட கேட்டுருக்காங்க, நான் அவங்களுக்கு சொன்ன பதில் கைமணம். இந்த கைமணம் மாறும் போது ருசி மாறும். சுவையான சமையலுக்கு தேவையான இந்த கைமணத்துல அப்படி என்ன தான் இருக்குன்னு கேட்ட நிறைய சொல்லலாம், இதுல குறிப்பிடும்படியா சொல்லணும்னா நேர்த்தி, பக்குவம், பாரம்பரியம் சேர்ந்த கலவைத்தான் கைமணம் என்கிறது. இது இருந்தா தான் ஒரு சாப்பாடு ருசிக்கும், மணக்கும் என்பது உண்மை.

எல்லா ஊரிலையும் குறிப்பிட்டு சொல்லும் படியா ஏதாவது ஒரு உணவு சாப்பிட இருக்கும், ஆனா நம்ம மதுரைய மட்டும் ஒரே ஒரு  உணவ வச்சு மட்டும் கட்டி  போட முடியாதுங்க. சங்கம் வளர்த்த மதுரையில மட்டும் தான் ஏரியாவுக்கு எரியா புதுமையான பதார்த்தங்களை தரளாமா ருசிக்கலாம். தூங்கா நகரமான மதுரைய தூங்க விடாம ஆக்குறதுல உணவின் பங்கும் உண்டுன்னு  அழகா சொல்லலாம்.

இங்குள்ள சாப்பாட்டு கடைகள் அவங்களுக்கே உண்டான ஸ்டைலில்  உணவுகளை இன்னைக்கும் பாரம்பரியம் மாறாம செஞ்சுட்டுவறாங்க, அதனால் தான் பல வருஷம் ஆயும் இந்த சாப்பாட்டு கடைகள் மக்கள் மனசுல்ல இன்னைக்கு வரைக்கும் இருப்பதுக்கான காரணம். தமிழ்நாட்டுல போய் விசேஷமான தமிழ் உணவுகள ருசிச்சு பாக்கண்ணும்னு நினைச்சுப்பாக்குற பல பேர் மனசுல தோணுற மோத ஊரு மதுரை அதை சுத்தி இருக்குற ஊருகளாத் தான் இருக்கணும், தமிழ்நாட்டுடைய பண்பாடு, கலாச்சாரம்ன்னு பலதையும்  சொன்ன நம்ம மதுரை மண்ணு சாப்பாட பத்தியும் சொல்ல மறக்கல. "மதுரைய சுத்துன கழுதை வேற எங்கயும் போகாது" என்பது ஒரு சொல். இது மதுரைல கிடைக்கக்கூடிய சாப்பாட்டுக்கும் பொருந்தும் என்பதுல சந்தேகமில்லை.

இனி வரும் நாளில எனது வலைப்பதிவுல மதுரைல நான் ருசிச்சு சாப்பிட்ட கடைகளுடைய பாரம்பரியம் பத்தின சுவாரசியங்களையும் அங்க எனக்கு கிடைச்ச புதுமையான அனுபவம், உணவுகளின் வரலாறு இது ல்லாத் தையும் உங்ககிட்ட பகிர்ந்துக்க போறேன்.

இந்த பதிவுல நான் உங்கள கூட்டிட்டு போறது இடியாப்பம் சாப்பிட. இது எனக்கு சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடித்தமான டிபன் பதார்த்தம். எங்க அம்மா கைப்பக்குவதுல ரெடியாவுற இடியாப்பம் நூல் மாதிரி மென்மையா விளையாட்டுதனமா சாப்பிடறதுக்கு இருக்கிறதானலேயோ என்னமோ எனக்கு சின்ன வயசுல இருந்து இடியாப்பம் மேல அவ்வளவு ஆசை. சைடு டிஷ் எதும் ரொம்ப இல்லாம நச்சுனு எளிமையா சாப்பிடக்கூடிய ஆள் தான் நம்ம இடியாப்பம். நூடுல்ஸ் தெரிஞ்ச நம்ம இளம் சந்ததிகள் கிட்ட இடியாப்பம் என்னும் ஒண்ணு மறைஞ்சு வரும் உணவாக ஆயிட்டு இருக்குது என்பது வருத்தம் தான். இடியாப்பம் மதுரைல எங்க ருசிக்கலாம்ன்னு நண்பர்கள் சில பேர் கிட்ட கேட்டப்ப அவங்க எனக்கு கைக்காட்டுன  இடம் கீழ வெளி வீதில "Christian Mission Hospital" எதிர்ல இருக்கிற பர்மா இடியாப்பம் கடையே. கீழ வெளி வீதியின் இருபக்கமும் இருக்கிற பழமை மாறாத கட்டிடங்கள  பாக்கும் போது “தென்னாட்டின் ஏதென்ஸ்னு” ஏன் மதுரைய சொல்றாங்கன்னு டக்ன்னு புரிஞ்சது எனக்கு. அப்படியே நடுந்து பர்மா இடியாப்ப கடைக்கிட்டபோகும் போது "Steamy Business" என்கிற ஆங்கில வார்த்தை கண்ணுலப் பட்டுச்சு. சின்னக் கடை தான் கடைக்குள்ள நாலு பேர் இடியாப்ப தட்டுல மின்னல் வேகத்துல இடியாப்பத்தப் பிழிஞ்சுட்டு இருந்தாங்க.

நல்ல வெள்ளை கலருல அழகா ஆவி பறக்க அடுக்கி வச்சுருக்கிற இடியாப்பத்த பாத்ததும் எனக்கு சாப்பிடணும்கிற ஆசை அதிகம் ஆச்சு. அதுக்கு முன்னாடி பர்மா இடியாப்ப கடைய பத்தின பாரம்பரியத்த தெரிஞ்சுக்காலாமேனு அங்கு பரபரப்பா வேலை செஞ்சுட்டு இருந்த பர்மா இடியாப்ப கடையோட முதலாளியம்மா தேவிகாகிட்ட பேச்சு கொடுத்தேன். தேவிகா சொன்னாங்க இது 49 வருஷம் பழைய கடை, 1966 ஆம் வருஷம் பர்மால இருந்து வந்த எங்கம்மா பேச்சியம்மாள் தகப்பனார் சுப்ரமணியம் சேர்ந்து Christian Mission Hospital நடைபாதைல வாளில  வச்சு  இடியாப்பம் வித்துட்டு இருந்தோம். எங்க அம்மா கைப்பக்குவத்துல தயார்ஆன இடியாப்பம், அயிரை மீன் குழம்பு எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவர்களுக்கு போனதையும் நினைவுபடுத்தினாங்க. எங்க குடும்பம் பெருசு, நான் எங்க அம்மா கூட இருந்து வியாபாரத்த பாத்துகிட்டேன். எங்கம்மா காலத்துக்கு அப்புறம் Christian Mission Hospital எதிர்ல இருக்கிற இந்த கடைல இடியாப்ப வியபாரம் செய்ய ஆரம்பிச்சேன். கடை காலைல ஆறு மணில இருந்து பத்து மணி வரை இருக்கும், சாயந்திரம் நாலுக்கு ஆரம்பிச்சு  இரவு ஒரு மணி வரை கூட கடைல இடியாப்பம் கிடைக்கும். இப்பம் ஒரு நாளைக்கு 70 கிலோ வரை அரிசிமாவு போட்டு இடியாப்பம் தயார் செய்யிறோம். எங்களுக்கு இந்த இடியாப்ப தொழில் நல்ல புகழ தந்து இருக்குது, இடியாப்பம் எங்களோட அடையாளமா இப்பம் ஆயிடுச்சு. அது தான் எங்க போனாலும் பர்மா கடைம்மான்னு கூப்பிடுறாங்கன்னு சிரிச்சுகிட்டே தேவிகா சொன்னங்க.

அப்படியே பேச்சு கொடுத்துட்டு இடியாப்பத்தின் விலையே கேட்டேன், ஒரு இடியாப்பம் ஏழு ரூபாய்ன்னு பதில் வந்தது. மூணு இடியாப்பத்த வைக்க சொன்னேன். அதுகூட காய்கறி குழம்பு, சீனி, தேங்காய் பால் வச்சு தட்ட கைல கொடுத்தாங்க. சேர்,டேபிள் எதுவும் வெளில இல்லை, கைல வச்சு தான் சாப்பிடணும்,இருக்கட்டுமே ஸ்பெஷல் ஆச்சே. சரி எல்லாம் கலந்து சாப்பிட்டால் பதார்த்தங்களின் சுவை தெரியாதுன்னு தனித்தனியா ஒவ்வொன்னையும் ருசிக்க ஆரம்பிச்சேன். முதல்ல இடியாப்பம், மூணு பங்கு பச்சரிசி ஒரு பங்கு புழுங்கல் அரிசி என்ற அளவு தான் இடியாப்பம் இவ்வளவு வெள்ளை நிறத்துல மென்மையா இருக்குறதுக்கு காரணமாம். இந்த கடைல வேலைப்பாக்குறவங்க பல வருஷமா இருக்கிறதும் இங்கு கிடைக்கிற இடியாப்பம் தரமாகவும் சுவையாகவும் இருப்பதுக்கு இன்னொரு காரணம் ஆக கூட இருக்கலாம். அடுத்தது எனது விரல் வந்து காய்கறி குழம்ப தொட்டது, வழக்கமா காய்கறி குழம்புன்னா பொதுவா எல்லா காய்களையும் வெட்டி போட்டு தேங்காய் சேர்த்து வைப்பாங்க.  

ஆனா இதுல கத்திரிக்காய், தக்காளி,பூண்டு சேர்த்து வதக்கி அரைச்சு தாளிச்சு வச்சுருந்தாங்க. இது இடியாப்பத்துக்கு தொட்டுக்கிட புதுமையா தான் இருந்தது. ஆனா எனக்கு இதுல தக்காளியின் சுவை கொஞ்சம் ஜோரா தெரிஞ்சது. இடியாப்பம் கூட தேங்காய் பால் ஊத்தி சாப்பிட்ட அது தனிச்சுவை தான், இவங்க தர்ற தேங்காய் பால்ல கிராம்பு, ஏலக்காய் வாசனை லேசா தெரிஞ்சது. எனக்கு  பிடிச்ச இடியப்பத்த இவ்வளவு ருசியா  சாப்பிட்ட தீர்ப்த்தில பார்சல் வாங்குற கூட்டத்துல இருந்து  நவுண்டு வந்து கைய அலம்பினேன்.    

இரண்டு இடியாப்பம் பர்சலை தேவிகம்மாட்ட வாங்கிட்டு, பர்மா இடியப்பம் கடைய விட்டு நகரும் போது இடியாப்பத்தோட சுவை மட்டும் இல்ல தேவிகாம்மா அடிக்கடி சொன்ன உழைப்பு என்ற சொல்லும் மனசுல நின்னுச்சு. நடைபாதைல தொடங்கிய இந்த இடியாப்ப வியாபாரம் இன்று மதுரைல பிரபலமான இடியாப்ப கடையாகவும் வியாபாரமாகவும் வளர்ந்ததுக்கு காரணம் இவங்களோட உழைப்புத் தான். 

மதுரைக்கு வந்திங்கன்னா ஒரு எட்டு இந்த பக்கம் வந்து சாப்பிட்டு பாருங்க !!! 

பர்மா இடியாப்பம்  கடை தொடர்பு எண்: 9944385873, 9843181817


No comments: